புதுவையை மிரட்டும் கொரோனா நிரம்பி வழியும் மருத்துவமனைகள் ஆட்டிப்படைக்கும் தொற்று அடங்குவது எப்போது?


புதுவையை மிரட்டும் கொரோனா நிரம்பி வழியும் மருத்துவமனைகள்  ஆட்டிப்படைக்கும் தொற்று அடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 13 May 2021 10:22 PM IST (Updated: 13 May 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் உகான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுவை,

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொடிய கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதையொட்டி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

ஆட்டிப்படைத்த தொற்று அடங்கியது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் 2-வது அலை பரவி இடியாக இறங்கியது. தொற்று 2-வது அலை பரவலில் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப் படியாக உயர்ந்து வாக்கு எண்ணிக்கையின் போது பெரிய உச்சத்தை அடைந்தது. அதன்பின் நாள்தோறும் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அரசு தரப்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் தொற்று குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் புதுப்புது உச்சத்தை தொட்டு மிரட்டி வருகிறது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதன்பிறகு ஆர்வம் காட்டவில்லை. இந்தநிலையில் கொரோனா தலை தூக்கியதால் விழித்துக் கொண்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து வேகம் எடுத்துள்ள நிலையில் புதுவை மாநிலத்திலும் புகுந்து கோர தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கிய போது நாள்தோறும் 100 முதல் 200 பேர் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வேகம் அதிகரித்து தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அதேபோல் உயிரிழப்பும் தினமும் 30 என்ற அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்த மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொற்று பாதிப்பின் வேகம் அபாயகரமானதாகவே மருத்துவ துறையினரால் பார்க்கப்படுகிறது.

எனவே தொற்று பாதிப்பை தடுக்க அரசு ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் குறையலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக காலை முதல் இரவு வரை கருவடிக்குப்பம் சுடுகாட்டில் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அந்த பகுதியை யொட்டி வசிப்பவர்கள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 500 படுக்கைகள் உள்ளன. அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளும், 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 300 படுக்கைகளும் அரசு சார்பில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

இந்த இடங்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு கொரோனா நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிவதால் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர்.

இதேவேகத்தில் தொற்றால் பாதித்தவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொற்று பரவல் அச்சத்தால் பொதுமக்கள் பலர் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு படையெடுக்கும் முக்கிய பிரமுகர்கள்
புதுச்சேரியில் ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. இருப்பினும் அரசியல் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இந்த மருத்துவமனைகளில் சேராமல் சென்னைக்கு சென்று அங்குள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறும் நிலை இருந்து வருகிறது.

இதனால் புதுச்சேரியில் உள்ள மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு எந்திரத்தின் அலட்சியம்
புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமடைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை என்பதால் கவர்னரே நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

தேர்தலுக்குப் பின் தொற்றின் வேகம் அதிகரித்து பொதுமக்களை பீதி அடையச் செய்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற கையோடு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் தங்கினார். அதன்பின் தொற்று பாதிப்புக்கு ஆளாகி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே புதுவை அரசின் சுகாதார துறை ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் இது இன்னும் முடக்கிப் போட்டது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் காட்டிக் கொண்டாலும் அதில் முன்னேற்றம் காணப்படவில்லை.

சுகாதார துறை சுதந்திரமாக செயல்படாமல் யாருக்கோ வந்தது போல் கும்ப கர்ண தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது. ஒரு பக்கம் கொரோனா வேகத்துக்கு பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்தபடி சென்றது.

அரசு எந்திரம் முடங்கிப் போனதால் தொற்று அதிகரித்து புதுவை மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது விழித்துக் கொண்டு சுகாதார துறை தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடி காட்டுமா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விவரம்
கொரோனா பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இணை நோய்கள் மற்றும் பாதிப்புகள் குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இணை நோயுடன் பாதிப்புக் குறைவாக உள்ளவர்கள் சாதாரண படுக்கைகளில் அனுமதிக்கப் படுகின்றனர். மூச்சு திணறல் உள்ளவர்கள் ஆக்சிஜன் படுக்கைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவிர்க்க முடியாத நிலைக்கு செல்பவர்களுக்கு வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக புதுச்சேரியில் மொத்தம் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நேற்று மாலை நேர நிலவரப்படி படுக்கைகள் விவரம் (காலி இடங்கள் அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

சாதாரண படுக்கைகள் மொத்தம் 2,243 (794) ஆக்சிஜன் படுக்கைகள் 1,391 (87) வெண்டிலேட்டர் படுக்கைகள் 218 (17).

புதுவையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகள் தொடர்பு கொள்ள 104 என்ற இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு காலியான படுக்கைகள் குறித்த விவரங்களை கேட்டால் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் சென்று பார்க்கும்படி கூறுகின்றனர். அல்லது கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி கூறுகின்றனர். அங்கு சென்றால் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு படுக்கைகளை உறுதி செய்துவிட்டு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறி கொரோனா நோயாளிகளை அலைக்கழிக்கின்றனர்.


Next Story