மராத்தா இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்ய வேண்டும்; தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்


மராத்தா இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்ய வேண்டும்; தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2021 9:34 AM GMT (Updated: 15 May 2021 9:34 AM GMT)

மராத்தா இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.

இடஒதுக்கீடு ரத்து

மராட்டியத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை மீறி மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்தது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந் தேதி தீர்ப்பு கூறியது.முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதத்தில், ‘அரசமைப்பு சாசனம் 102-வது பிரிவு திருத்தம், சமூகரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் பட்டியலை அறிவிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை பாதிக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் அரசமைப்பு சாசனம் 102-வது பிரிவு திருத்தம் தொடர்பாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசின் சார்பில் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்னாவிஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்துள்ளது. ஆனால் இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை உயர்த்துமாறு மாநில அரசு சார்பில் இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்யவில்லை. இதில் மாநில அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறது. உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story