கடலூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிதிஉதவி வழங்கும் பணி தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதன்மூலம் மாவட்டத்தில் 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
கடலூர்,
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்து போட்டார். தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
7¼ லட்சம் பேர்
இந்த நிவாரண நிதி வழங்குவதற்காக கடலூர் மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 1,416 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டை உள்ள சுமார் 7¼ லட்சம் பேருக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.147.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 37 ஆயிரத்து 43 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 428 இலங்கை அகதிகளுக்கும் கொரோனா முதல் தவணை நிதியுதவி வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக தினசரி ஒவ்வொரு கடைகளுக்கும் 200 பேர் வாங்கும் வகையில் ஏற்கனவே டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள்
அதன் அடிப்படையில் ரூ.2 ஆயிரம் நிதி உதவி பெறுவதற்காக டோக்கன் பெற்ற அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலை தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு திரண்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் ரேஷன் கடை முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.2 ஆயிரம் நிதி உதவியை பெற்று சென்றனர். இந்த பணி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story