திருவாரூர் மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 12:55 PM GMT (Updated: 16 May 2021 12:55 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்கிறது. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்து வருகிறது. இதில் 3 போகமும் நெல் சாகுபடியை மட்டுமே பிரதானமாக விவசாயிகள் செய்து வருகின்றனர். மாற்று பயிர் என்பது மிக குறைவு. அதற்கு காரணம் மண் வளம் என்பது தான் விவசாயிகளின் கருத்து.

கடந்த பருவத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து 6 லட்சத்து 38 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாராகிறது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரிசியாக வழங்கப்படுகிறது.

நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா அறுவடையின் போது நெல் கொள்முதலில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதிய சேமிப்பு கிடங்கு இல்லாதது தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இதனால் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் முடிந்த பின்னரும், நெல் மூட்டைகள் பாதுகாப்பு இன்றி இருப்பதால் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்து வருகிறது.

அதிக கொள்ளளவு

திருவாரூர் கிடாரங்கொண்டானில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி உள்ள இந்த கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நெல் மூட்டைகளை வெயில், மழையில் பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களும், கூடுதல் செலவும் செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த கிடங்கு தற்காலிக சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை பாதுகாக்க அதிக கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story