பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பு


பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 8:25 PM IST (Updated: 16 May 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் கொரோனா முழு ஊரடங்கால் பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து பனை தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் :

பனங்கருப்பட்டி தயாரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், நல்லூர், கரட்டுச்சாலையூர், பழைய தோப்பூர், சுக்காம்பட்டி, நடுத்தோப்பூர், களத்தூர், மாமரத்துசாலை, ஆர்.கோம்பை மற்றும் அதனைச்சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

இங்கு பதநீர் இறக்கி, பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் 300- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை பனை மரத்தில் பதநீர் அதிகளவில் சுரக்கும். பனை மரத்தில் இருந்து சேகரிக்கும் பதநீரை, கொப்பரையில் காய்ச்சி, அதை கொட்டாங்குச்சியில் ஊற்றி பனங்கருப்பட்டியாக பெண் தொழிலாளர்கள் தயாரிக்கிறார்கள். 

கடந்த ஆண்டு ஒரு கிலோ கருப்பட்டி ரூ.450 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.300 வரை விற்பனையாகிறது.  

அரசு கொள்முதல் 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பனங்கருப்பட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதுகுறித்து கரட்டுச்சாலையூரை சேர்ந்த பனைமரத்தொழிலாளி சண்முகவேல் கூறியதாவது:- 

கடந்த 1983-ம் ஆண்டு வேடசந்தூர் பகுதியில் பனங்கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் தொடங்கப்பட்டது. 

ஆனால் இந்த சம்மேளனம் தொடங்கிய சில வருடங்களிலேயே பூட்டப்பட்டது. இதனால் வேறுவழியின்றி பனங்கருப்பட்டியை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்.

 பனைத்தொழிலாளர்களிடம் அரசே நேரடியாக கருப்பட்டியை கொள்முதல் செய்ய  வேண்டும். 

ரூ.10 ஆயிரம் நிவாரணம் 
தொழிலாளர்களுக்கு உரிமம் கொடுக்கும்போதே, அவர்களுக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கவேண்டும். 

ஒவ்வொரு ஆண்டும் 6 மாதம் மட்டுமே எங்களுக்கு இந்த பணி இருக்கும். மற்ற நேரங்களில் தனியார் தோட்டங்களுக்கு சென்று தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபடுவோம். 

தற்போது சீசன் நேரத்தில் பனங்கருப்பட்டி தயாரித்தாலும், கொரோனா ஊரடங்கால் அதை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறோம். 
இவ்வாறு அவர் கூறினார். 

பனைத்தொழிலை வாழ்வாதாரமாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்டும் செயல்படும் பனைத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story