கனமழைக்கு 27 வீடுகள் சேதம்


கனமழைக்கு 27 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 16 May 2021 11:39 PM IST (Updated: 16 May 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு 27 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு 27 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கனமழை
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 27 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. சுவரின் நிலை மோசமாக இருந்ததை அறிந்த வீட்டு உரிமையாளர் முன் எச்சரிக்கையாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்று விட்டார். இதனால்  அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது சுவர் விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் ஒரு மரம் விழுந்து கிடக்கிறது. அதை வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல தோவாளை தெள்ளாந்தியிலும் ஒரு வீடு இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 2 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
27 வீடுகள் சேதம்
தோவாளை தாலுகாவில் 4 வீடுகள், கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. 9 வீடுகளில் சுவர்கள் விழுந்து ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் 4 இடங்களில் மரங்களும், 3 இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்தன. விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகள் சேதம் அடைந்தன. 6 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு மின் கம்பம் சாய்ந்துள்ளது. இதே போல கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளின் சுவர் இடிந்தன. ஒரு வீடு முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.
வீடுகள் இடிந்தன
தொடர் மழையால் குலசேகரம் அருகே திருநந்திக்கரை மூலைபாகத்தை சேர்ந்தஅனிதா என்பவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தொடர்ந்து அவர்கள் திருநந்திக்கரை அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். 
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (32) என்பவரின் வீடும் கனமழையால் இடிந்தது. திருநந்திக்கரை பாலம் அருகே சானல் கரையில் வசிக்கும் சொர்ணம் (52) என்பவரின் வீட்டின் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த வேலப்பன் (60) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்த நிலையில் உள்ளது. மேலும் குலசேகரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் பல குடிசை வீடுகளின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மரம் முறிந்து விழுந்தது
களியக்காவிளை அருகே இளஞ்சிறையை அடுத்த மானாங்கோணம் கூவரவிளையை சேர்ந்த அனில்குமார் என்பவருடைய வீட்டின் அருகே நின்ற ஒரு பெரிய அயனி மரம் முறிந்து, வீட்டின் மீது விழுந்து சுவர் இடிந்தது. 
அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் உயிர் தப்பினர். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் தெப்பகுளத்தின் கரையில் நின்ற ஒரு மரம் வேருடன் சாய்ந்து குளத்தில் விழுந்தது.
பள்ளிக்கூட சுவர் இடிந்தது
களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பள்ளியில் ஒரு பழமையான கட்டிடத்தின் சுவர்  இடிந்து சாலையில் விழுந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் ஊரடங்கு காரணமாக ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுபோல் அருமனை இடைக்குளம் பகுதியில் தோமஸ் என்பவருடைய வீட்டின் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. இதில் தோமஸ் மற்றும் அவரது மனைவி புஷ்பராஜம் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் பள்ளியில் உள்ள பழமையான கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் குமரி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக 2 வீடுகள் முழுவதுமாகவும், 25 வீடுகள் பாதி அளவும் என மொத்தம் 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 13 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 6 மின் கம்பங்கள் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் விழுந்த மரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story