ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்


ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 16 May 2021 6:17 PM GMT (Updated: 16 May 2021 6:17 PM GMT)

ஞாயிறு முழு ஊரடங்கால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது .இதைத் தடுப்பதற்காக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படவில்லை .மாறாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி மதியம் 12 மணி வரை செயல்பட்ட கடைகள் நேற்று முன்தினம் காலை 10 மணியுடன் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. விழுப்புரத்தில் காய்கறி,மளிகை, பலசரக்கு கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்பட பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் விதிமுறைகளை மீறி விழுப்புரத்தில் சிலர் இறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இதையடுத்து அந்த கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். விக்கிரவாண்டியில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி பைக்கில் வெளியே சுற்றியவர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.  விக்கிரவாண்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார்  ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு  அபராதம் விதித்தனர். 
 
பாதுகாப்பு 

இதேபோல் செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் உள்பட மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மருந்து கடைகள், பால்விற்பனை நிலையம் ஆகியவை திறந்து இருந்தது. ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கும்,  தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் மருத்துவமனை, மருந்துகடை, பால் பூத்துகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் நகரின் பிரதான சாலைகளின் குறுக்கே தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி நகர பகுதிக்குள் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும், திருப்பி அனுப்பியும் நடவடிக்கை எடுத்தனர். 

10 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

திருக்கோவிலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு நகரில் அனாவசியமாக சுற்றி திரிந்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், 10 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 
இதுதவிர திருக்கோவிலூர் நகருக்குள் தேவை இன்றி நுழைவதை தடுக்கும் வகையில் கீழையூர் தரைப்பாலம், சந்தப்பேட்டை அய்யனார் கோவில் பகுதியில் சாலையின் குறுக்கே சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
அதேபோல் சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயப்பாளையம் என மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன.

Next Story