ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி குறைந்த பயணிகளுடன் 85 விமானங்களே இயக்கம் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது


ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி குறைந்த பயணிகளுடன் 85 விமானங்களே இயக்கம் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 16 May 2021 10:19 PM GMT (Updated: 16 May 2021 10:19 PM GMT)

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று குறைந்த பயணிகளுடன் 85 விமானங்களே இயக்கப்பட்டன. இதனால் விமான நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

ஆலந்தூர், 

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கையும் அரசு அறிவித்தது. இதனால் விமான பயணிகள் பலா் தங்களது வெளியூா் பயணங்களை ரத்து செய்து விட்டதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான ஏப்ரல் மாதம் 25-ந் தேதி 34 நகரங்களுக்கு 168 விமானங்கள் சென்று வந்தன. அதன்பிறகு தமிழக அரசு இ-பாஸ் போன்ற தளர்வுகளை மீண்டும் அமல்படுத்தியதால் பயணிகள் வரத்து மேலும் பெரும் அளவில் குறைந்துவிட்டன.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கான நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ஆமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்பட 19 நகரங்களுக்கு 42 விமானங்கள் புறப்பட்டு சென்றன.

அதேபோல் 21 நகரங்களில் இருந்து 43 விமானங்கள் சென்னைக்கு வந்தன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் நேற்று மொத்தம் 85 விமானங்களே இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு 2,097 பேரும், பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு 1,967 பேரும் பயணம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் நகருக்கு 2 பேரும், திருச்சி, விசாகப்பட்டினம் நகரங்களுக்கு தலா 10 பேரும், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி நகருக்கு 6 பேரும், பெங்களூருக்கு 6 பேரும் சென்றனர்.

அதேபோல் பெங்களூருவில் இருந்து 9 பேரும், ஆந்திரா மாநிலம் கர்னூலில் இருந்து 7 பேரும் சென்னை வந்தனர். இதுபோல் சில விமானங்களில் 10-க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. அதோடு இ-பாஸ் மற்றும் விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுவே பயணிகள் வரத்து குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் சேவை குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story