முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன- ரோடுகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன- ரோடுகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 16 May 2021 10:38 PM GMT (Updated: 16 May 2021 10:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தின்றி ரோடுகள் வெறிச்சோடின.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தின்றி ரோடுகள் வெறிச்சோடின. 
கோபி
தமிழகத்தில் வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று அனைத்து கடைகளும் மூடப்படும். பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டும் இயங்கும். வாகனங்கள் ஓடவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரோடுகள் வெறிச்சோடி காணப்படும்.
அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கோபியில் பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. மார்க்கெட் பூட்டப்பட்டது. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் சத்தி கோபி மெயின் ரோடு, பாரியூர் ரோடு, மொடச்சூர் ரோடு வெறிச்சோடிக் கிடந்தன.
வழக்குப்பதிவு
ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். கோபி போலீஸ் சப்-டிவிஷனுக்கு உள்பட்ட கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், வரப்பாளையம், நம்பியூர், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் முக கவசம் அணியாமல் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசை மதிக்காமல் சென்ற 60 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் அனைத்து பகுதிகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அந்தியூர் கால்நடை சந்தை வெறிச்சோடியது. அந்தியூர் பகுதியில் பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்க், ஏ.டி.எம். மையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
மேலும் வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் பர்கூர் போலீசார் வாகன சோதனை நடத்தி, வாகனங்கள் எதுவும் அந்தியூர் பகுதிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தினர். அதேபோல் தட்டகரை சோதனைச்சாவடியில் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரக்கூடிய அனைத்தும் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன. மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு வந்த வாகனங்கள் மற்றும் சிகிச்சைக்காக வரக்கூடிய ஆம்புலன்ஸ் மட்டுமே அந்தியூர் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டன.
ரோந்து பணி
இதையொட்டி அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் அந்தியூர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளும், அந்தியூர் பேரூராட்சி அதிகாரிகளும் கடைகள் ஏதாவது திறக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர். மேலும் அத்தாணி ஆப்பக்கூடல் பகுதிகளிலும் ஊரடங்கை முன்னிட்டு போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் மருந்துக்கடைகள், பால் பண்ணைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதி, வடக்கு பேட்டை, ரங்கசமுத்திரம், கோம்புபள்ளம் பகுதி ஆகிய இடங்களில் உள்ள ரோடுகள் முழுவதும் வெறிச்சோடி கிடந்தன. முழு ஊரடங்கு மீறி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலத்தில்  முக்கிய வீதிகளில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லாரி, ஆட்டோ, வேன் எதுவும் ஓடவில்லை ஆம்புலன்ஸ் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை பஸ் நிலையத்தில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட், ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கோவை ரோடு, பழைய பஸ் நிலைய ரோடு, சென்னிமலை ரோடு, பவானி ரோடு, ஈரோடு ரோடு மற்றும் குன்னத்தூர் ரோடு ஆகியவை  மக்கள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்தன.
ரோட்டோர காய்கறி கடைகள், பழ விற்பனை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மேலும் போலீசார் நகரின் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடுமுடி
கொடுமுடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கொடுமுடி முக்கிய கடைவீதி, கோவில் பகுதிகள், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சாலைப்புதூர் ரவுண்டானா, கரூர்- ஈரோடு பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் மற்றும் அருகில் உள்ள தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய முக்கியமான இடங்களில் உள்ள வணிகம் சம்பந்தப்பட்ட மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள், டீக்கடைகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அனைத்துப் பகுதிகளிலும் நெடுஞ்சாலை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மலையம்பாளையம், நடுப்பாளையம், பாசூர், சோளங்காபாளையம் பகுதிகளில் போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம், கடைகள் மூட வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் ஆகியவை குறித்து பிரசாரம் செய்தனர். லாரிகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.

Next Story