கொரோனாவுக்கு எதிரான போரில் நோயாளிகளின் குடும்ப டாக்டர்களும் இணைய வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
கொரோனாவுக்கு எதிரான போரில் நோயாளிகளின் குடும்ப டாக்டர்களும் இணைய வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்து உள்ளார்.
குடும்ப டாக்டர்கள்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் உள்ள தனியார் டாக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது முதல்-மந்திரி பேசியதாவது:-
நோயாளிகள் மற்றவர்களை விட குடும்ப டாக்டர்களை அதிகம் நம்புவார்கள். எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் குடும்ப டாக்டர்கள் இணைந்தால், வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வழிமுறைகளை தீவிரமாக பின்பற்ற முடியும்.
இணைய வேண்டும்வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல் நிலை, இணை நோய் மற்றும் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை குடும்ப டாக்டர்கள் கண்காணிக்க முடியும். எனவே அவர்களுக்கு ஆஸ்பத்திரி சிகிச்சை தேவைப்பட்டால் குடும்ப டாக்டர்கள் வழிகாட்டலாம். வீடுகளில் அறிகுறிகள் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால், அது கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க உதவும். தங்களுக்கு அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் குடும்ப டாக்டர்கள் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில கொரோனா தடுப்பு குழுவை சேர்ந்த வல்லுநர்களும் பங்கு பெற்றனர். அவர்கள் தனியார் டாக்டர்களுக்கு கொரோனா சிகிச்சை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.