முழு ஊரடங்கு அமல்: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு அமல்: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 May 2021 5:57 PM IST (Updated: 17 May 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடின.

மயிலாடுதுறை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 10-ந் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரங்கை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த 15-ந் தேதி முதல் இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது.

வாகன தணிக்கை

மேலும் ஏற்கனவே அறிவித்தபடி முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் இருந்தே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி எங்கிருந்து வருகிறீர்கள்? என்று போலீசார் விசாரித்தனர். உரிய காரணங்கள் இல்லாமல் வந்தவர்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலித்தனர். மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மயிலாடுதுறையில் நேற்று காலை தரங்கம்பாடி சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 15-ந் தேதி முதல், புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நோய் பரவலை தடுக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.

தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைகளிலும் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம். ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அபராதம்

நேற்று முன்தினம் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக கவசம் அணியாதவர்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தவர்கள் என 750 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் 15 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காரணமின்றி ஊர் சுற்றிய 351 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 500 போலீசார் மற்ற துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

நகரமே வெறிச்ேசாடியது

மயிலாடுதுறை நகரத்தில் நேற்று பட்டமங்கல தெரு, மகத்தான தெரு, காந்திஜி சாலை ஆகிய முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் மயிலாடுதுறை நகரமே வெறிச்சோடி காணப்பட்டன.

சீர்காழி

முழு ஊரடங்கையொட்டி சீர்காழியில் நேற்று பால் கடைகள் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் ஊரடங்கு மீறி சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவெண்காடு

பூம்புகார், தர்மகுளம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தர்மகுளம் கடைவீதியில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் திருவெண்காடு, மங்கைமடம், மணிக்கிராமம், நாங்கூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பொறையாறு

முழுஊரடங்கையொட்டி பொறையாறு, தரங்கம்பாடி, பரசலூர், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. செம்பனார்கோவில், பொறையாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story