ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் - தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு


ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் - தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 19 May 2021 1:41 PM GMT (Updated: 2021-05-19T19:12:20+05:30)

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரியிருந்தது.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி ஸ்டெர்லட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவ்க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி திடீரென ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரம் (cooler) பழுதடைந்ததால், ஆக்சிஜன் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ வல்லுனர்கள் உதவியோடு, இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியை ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இன்று (புதன்கிழமை) இரண்டாம் கட்டமாக 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் எனவும், தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story