பசுமைக்கு திரும்பிய முதுமலை மசினகுடி வனப்பகுதி


பசுமைக்கு திரும்பிய முதுமலை  மசினகுடி வனப்பகுதி
x
தினத்தந்தி 19 May 2021 3:20 PM GMT (Updated: 19 May 2021 3:20 PM GMT)

தொடர்மழையால் முதுமலை, மசினகுடி வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.

கூடலூர்

தொடர்மழையால் முதுமலை, மசினகுடி வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.

கோடை வறட்சி

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, மசினகுடி பந்தலூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கோடை வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டது. தொடர்ந்து வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு பசும்புற்கள் கருகியது.

இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக  வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. 

தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை, பாக்கு போன்றவற்றை சேதப்படுத்தின. இதைத் தவிர்க்க வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தரை தொட்டியில் வனத்துறை சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது.

பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி

இந்த நிலையில் அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. 

மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதி பசுமை திரும்பி உள்ளது. இதேபோல் வனவிலங்குகளின் பசுந்தீவனத் தட்டுப்பாடு பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது. 

மேலும் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் வன விலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்நிலைகளில் இருப்பு உள்ளதாக வனத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீ அபாயம் நீங்கியது

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் காட்டுத்தீ பரவி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி தீயில் எரிவது வழக்கம். தற்போது தொடர் மழை பெய்துள்ளதால் காட்டுத்தீ அபாயமும் நீங்கியுள்ளது. 

மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமும் தட்டுபாடு இன்றி கிடைக்கும். இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து குறையும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story