திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடைமழை


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடைமழை
x
தினத்தந்தி 19 May 2021 4:46 PM GMT (Updated: 19 May 2021 4:46 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று கோடைமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் நிலவியது.

திண்டுக்கல்:

காலையில் வெயில் 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்துகிறது. காலை 8 மணிக்கே வெயில் உக்கிரத்தை காட்டுவதால் மக்கள் தினமும் வியர்வையில் குளித்தனர்.

 இந்த கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானது.

அதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. அது எச்சரிக்கை அறிவிப்பாக இருந்தாலும் விவசாயிகள் உள்பட அனைவரும் மழையை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

 ஆனால், முதல் நாளில் பலத்த காற்று மட்டுமே வீசியதோடு பல பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்தி, மரங்களையும் முறித்தது.
மறுநாள் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

அதன்பின்னர் தொடர்ச்சியாக தினமும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்படி நேற்றும் காலையில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்தது.

கொட்டித் தீர்த்த மழை 

இதற்கிடையே திண்டுக்கல்லில் மாலை 4 மணி அளவில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. மாலைநேர சூரியனின் மஞ்சள் நிற கதிர்கள் பூமியில் விழாமல் தடுத்தன. இதையடுத்து மாலை 5.30 மணிக்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது. 

அடுத்த சில நிமிடங்களில் வேகமெடுத்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன்பின்னரும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

கொடைக்கானல் 

அதேபோல் கொடைக்கானலில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

அருவிகளுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேவதை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் நீர்மட்டம் உயர்ந்தது. ஏற்கனவே நட்சத்திர ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் நிலையில் அதிகமான உபரி நீர் வெளியேறியது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. 

மேலும் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், பழனி, நிலக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

இதனால் தினமும் கோடை வெப்பத்தால் வியர்வையில் குளித்த மக்கள், நேற்று கோடைமழையில் நனைந்தனர். மேலும் பகலில் கொளுத்திய வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெப்பம், மழையால் தணிந்து இரவில் இதமான குளிர் நிலவியது. 

அதேநேரம் எதிர்பார்க்காத நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story