ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்க காலம் தொடக்கம்


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்க காலம் தொடக்கம்
x
தினத்தந்தி 19 May 2021 5:49 PM GMT (Updated: 2021-05-19T23:19:01+05:30)

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் 

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலங்களுக்குள் ஒன்று ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த காப்பத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகள் உள்ளன. 

இந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலிகள், சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமல்லாது மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப்பூச்சிகளும் அதிகமாக உள்ளன.

வண்ணத்துப்பூச்சிகள்  

ஆண்டுதோறும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வனப்பகுதியில் மழைக்காலம் நிலவும். இந்த காலம் வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் பருவமாகும். இந்த பருவத்தில் வண்ணத்துப்பூச்சிகள் சிற்றோடை, ஓடை, ஆறுகள் அருகே கூட்டம், கூட்டமாக காணப்படும். 

ஆழியாறு, வால்பாறை, சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இல்லை. இதன் காரணமாக ரோட்டோரத்தில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. 

 இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இனப்பெருக்க காலம் தொடக்கம் 

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் கல்லாறு, சிறுவாணி மற்றும் ஆழியாறு, நவமலை, சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக வண்ணத்துப்பூச்சிகளை பார்க்கலாம். 

மழைக்காலத்தில் அடித்து வரப்பட்டு தேங்கும் மண்ணில் கூட்டமாக, அமர்ந்து தேவையான சத்துக்களை எடுக்கின்றன. இதுவரைக்கும் 150-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகளை அடையாளம் கண்டு வனத்துறையினர் காட்சிப்படுத்தி உள்ளனர். 

தற்போது இங்கு வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இங்கு காணப்படுகிறது. 

தனி பூங்கா 

புலிகள் காப்பகம் மாசுபடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று ஒரு தனி பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஏற்ற பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. 

இதன் காரணமாக பூங்காவில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டு வருவது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story