குடிநீர் கேட்டு ஏரல் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு ஏரல் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 May 2021 5:07 PM GMT (Updated: 2021-05-20T22:37:34+05:30)

சீராக குடிநீர் வழங்ககோரி ஏரல் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

ஏரல்:
ஏரலை அடுத்த திருவழுதிநாடார்விளை தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது ஏரல் பஞ்சாயத்தின் 7, 8-வது வார்டு பகுதி ஆகும். இந்த ஊருக்கு தாமிரபரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய் வழியாக திருவழுதிநாடார்விளை அம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் தெரு நல்லி மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அங்குள்ள ஆழ்துளை கிணறு மூழ்கி சேதம் அடைந்தது. இதனால் திருவழுதிநாடார்விளை ஊருக்கு குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து அதிகாரியை சந்தித்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பஞ்சாயத்து சார்பில் ஏரலுக்கு வழங்கும் குடிநீரில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற முறையில் தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மாற்று ஏற்பாடு மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் திருவழுதிநாடார்விளை மெயின் பகுதிகளுக்கு ஓரளவு வந்தாலும், வீடுகளுக்கும், ஹரிஜன் காலனி, சேர்மன் கோவில் தெரு ஆகிய பகுதிளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக் களில் குடிநீர் சரியாக வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் பல மணி நேரம் காத்து கிடந்தும் தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஹரிஜன் காலனி ஊர் தலைவர் லிங்ககுமார் தலைமையில் காலிக்குடங்களுடன் ஏரல் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்து முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் தெருவில் கடந்த 4 மாதங்களாக குழாயில் தண்ணீர் சரியாக வரவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்தில் ஊர் மக்கள் சார்பில் பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாற்று ஏற்பாடாக ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்படும் குடிநீரும் வீடுகளுக்கும், தெரு குழாய்களுக்கும் ஒழுங்காக வரவில்லை. இதனால் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் மண் அரிப்பினால் மூழ்கி விட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தாமிரபரணி ஆற்றில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அமைப்பதற்கு அரசிடம் இருந்து நிதியை பெறுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் நிதியை பெற்று நிரந்தர தீர்வு காணப்படும். அதுவரை மாற்று ஏற்பாடாக அப்பகுதியில் குடிநீர் வரவில்லை என கூறப்படும் பகுதிகளில் 2 நாளில் குழாய்களை சரிபார்த்து தண்ணீர் வழங்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story