அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உழவர் சந்தை அமைக்கும் பணிகள் தீவிரம்- இன்று முதல் செயல்படும்


அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உழவர் சந்தை அமைக்கும் பணிகள் தீவிரம்- இன்று முதல் செயல்படும்
x
தினத்தந்தி 20 May 2021 9:45 PM GMT (Updated: 20 May 2021 9:45 PM GMT)

அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உழவர் சந்தை செயல்பட உள்ளதால், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஈரோடு
அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உழவர் சந்தை செயல்பட உள்ளதால், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
உழவர் சந்தைகள்
ஈரோட்டில் சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த மாதம் சம்பத் நகர் உழவர் சந்தை 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி விவசாயிகள் குமலன்குட்டை மாநகராட்சி பள்ளிக்கூட வளாகத்தில் கடைகள் போட அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு சம்பத்நகர், பெரியார் நகர் மற்றும் குமலன்குட்டையில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. ஆனால் இந்த பகுதிகள் குறுகலாக இருந்ததால் பொதுமக்கள் நெரிசல் அதிகமாக இருந்தது. சம்பத்நகர் உழவர் சந்தை பகுதியில் தினமும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. எனவே உடனடியாக சந்தையை பரந்த இடவசதி உள்ள இடத்துக்கு மாற்ற மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
அரசு பள்ளிக்கூடம்
அதன்படி கடந்த முறை கொரோனா ஊரடங்கின்போது அமைக்கப்பட்டதுபோன்று, இந்த முறையும் உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்கும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சம்பத்நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் இயங்காது என்றும், குமலன்குட்டை உழவர் சந்தை செயல்படாது என்றும் கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட மைதானத்தில் விவசாயிகள் கடை அமைக்கவும், பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே விவசாயிகள் தாமதமின்றி சந்தைக்கு வந்து செல்லவும், விளை பொருட்களை நல்ல முறையில் சந்தைக்கு கொண்டு சேர்க்கவும் வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story