நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 21 May 2021 8:42 PM IST (Updated: 21 May 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மானூர், நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, கல்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணியிடம், அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 அதன்படி கல்துறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ் நேற்று திறந்து வைத்தார். 

நெல் விற்பனையை தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்திய புவனா தொடங்கி வைத்தார். 

இதேபோல் மானூர், நரிக்கல்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. 

இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,958-க்கும், பொது ரக நெல்லுக்கு ரூ.1,918-க்கும் அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

மேலும் கோரிக்கையை ஏற்று உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்த முதல்- அமைச்சருக்கும், உணவுத்துறை அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 


நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story