கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி உத்தரவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி உத்தரவு
x
தினத்தந்தி 21 May 2021 10:46 PM IST (Updated: 21 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலருமான சமயமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தடுப்பூசிகள் இருப்பு, ஆக்சிஜன் படுக்கை வசதி, சாதாரண படுக்கை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் கிரண்குராலா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பின்னர் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி பேசும்போது, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணிகளை தீவிரபடுத்துவதோடு, கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், அரசு மருத்துவ கல்லூரி டீன் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், கொரோனா வார்டு தலைமை மருத்துவர் பழமலை, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story