தவணை தொகை செலுத்தக்கோரி தனியார் நிதி நிறுவனம் மிரட்டல்: ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகை
தவணை தொகை செலுத்தக்கோரி மிரட்டிய தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று சுயதொழில் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களால் தொழில் செய்ய முடியவில்லை.
எனவே வருமானமின்றி கடனுக்கான தவணை தொகையை அவர்களால் திருப்பி செலுத்த இயலவில்லை. ஆனால் கடன் கொடுத்த தனியார் நிறுவனத்தினர் தவணை தொகையை செலுத்தக்கோரி பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் நேற்று திடீரென ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், புதுவையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் கடனுக்கான தவணையை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பற்றி அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. நேரு அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஊரடங்கு காலத்தில் இந்த போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story