மராட்டியத்தில் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 7:20 AM IST (Updated: 28 May 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் 1-ந் தேதிக்கு பிறகும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும், சில நாட்களுக்கு பிறகு தான் படிப்படியாக தளர்வுகள் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி தற்போது அதன் தாக்கம் தணிந்து உள்ளது.

மந்திரி சபை கூட்டம்
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஊரடங்கை போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த மாதம் தொடக்கம் முதல் மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வருகிற 1-ந் தேதி காலை 7 மணியுடன் முடிகிறது.எனவே அதன்பிறகு மாநிலத்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான கருத்தை நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவாரும் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

10 சதவீதத்திற்கு மேல்...
மந்திரி சபை கூட்டத்தின் போது, மாநிலத்தில் உள்ள கொரோனா பரவல் நிலவரம் விவரமாக விளக்கி கூறப்பட்டது. அப்போது மாநிலத்தில் 36 மாவட்டங்களில் 21-ல் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே தற்போது ஒரே அடியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியாக இருக்காது என மந்திரி சபையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே அறிவிப்பு

இந்தநிலையில் மந்திரி சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

10 முதல் 15 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சதவீதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இது தவிர கருப்பு பூஞ்சை நோய் மிரட்டி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு தற்போது தினசரி தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து தேவைப்படுகிறது.

விலக்கி கொள்ளப்படாது
நடைமுறையில் உள்ள ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு ஒட்டுமொத்தமாக விலக்கி கொள்ளப்படாது. மாறாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். சில நாட்களுக்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் செய்யப்படும். இது தொடர்பாக மந்திரி சபையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story