மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்


மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 May 2021 1:56 AM GMT (Updated: 28 May 2021 1:56 AM GMT)

மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி மையங்கள்

பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி போடும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மெட்ரோ ரெயில் கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 நாட்கள் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. நேஷனல் கல்லூரி, எம்.ஜி.ரோடு, பையப்பனஹள்ளி, விஜயநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நிலையத்தில 6 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7,500 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் உள்ள சில பெரிய நிறுவனங்கள், சமூக பொறுப்பு சட்ட நிதியின் மூலம் தங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளன. இது பாராட்டுக்குரியது. இந்த சமூக பொறுப்பு சட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் சுகாதாரத்துறைக்கு ரூ.175 கோடி வழங்கியுள்ளன. இது கொரோனாவுக்கு எதிரான அரசின் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் ரெயில் சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது. கெங்கேரி முதல் சல்லகட்டா வரை இந்த பாதை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்ப்பதில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து மிக முக்கிய பங்காற்றுகிறது.

பெங்களூரு சில்க் போர்டு முதல் சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story