புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் பலம் 12 ஆக உயர்ந்தது; என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி; புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தி என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ.க. அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பா.ஜ.க. பிடிவாதம்
தேர்தல் முடிவில் புதுவையில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை இந்த கட்சிகள் வென்றன. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமாக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.தேர்தல் முடிவின்போது 10 இடங்களை பிடித்த என்.ஆர்.காங்கிரசுக்கும், 6 இடங்களில் வென்ற பா.ஜ.க.வுக்கும் இடையே அமைச்சரவையில் இடம் பெறுவதில் பிரச்சினை எழுந்தது.அதாவது, முதல்-அமைச்சர் உள்பட 6 அமைச்சர்களைக் கொண்ட புதுச்சேரி அமைச்சரவையில் துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்டு பா.ஜ.க. அடம் பிடித்து வருகிறது.முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்று 20 நாட்கள் ஆகி விட்ட நிலையில் அமைச்சரவை விரிவாக்கம், பதவி ஏற்பு குறித்து முடிவு எடுக்காதது என அரசியலில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
தயங்குவது ஏன்?
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் துணை முதல்-அமைச்சர் பதவி என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும். அப்படி இருந்தும் அரசியல் சாசனப்படி அதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதை விட்டுத் தரவும் தயாராக உள்ளதாக ரங்கசாமி உறுதி அளித்ததாக தெரிகிறது.அதே நேரத்தில் 3 அமைச்சர் பதவியை தர வேண்டும் என்பதில் ரங்கசாமிக்கு உடன்பாடு இல்லை. கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை மத்திய அரசு உருவாக்கி தந்தால் துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவியை தர அவர் தயாராக உள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்க
முடியும் என்று ரங்கசாமி தரப்பில் உறுதியாக பா.ஜ.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுவை அரசில் எடுக்கப்படும் எந்த முடிவாக இருந்தாலும் அமைச்சரவையின் ஒப்புதல் தேவை. அப்படியிருக்கும்போது
தனது வசம் கூடுதல் அமைச்சர் பதவியிடம் இருந்தால் தான் பிரச்சினை இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் என்று ரங்கசாமி கருதுகிறார்.சரிபாதி அமைச்சர் பதவிகளை பா.ஜ.க.வுக்கு கொடுத்தால் பிற்காலத்தில் அவர்களை சார்ந்தே முடிவுகளையும், ஆட்சி அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுக்க வேண்டியது வரும் என கருதி கூடுதல் இடங்களை தர அவர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வளைப்பு
அதுமட்டுமின்றி கொரோனா தொற்றினால் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்ததும் ரங்கசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தனக்கு வைக்கப்பட்ட செக் ஆகவே கருதி வந்தநிலையில் அடுத்த அதிரடியாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை (கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ், சிவசங்கர், அங்காளன்) தனது பக்கம் வளைத்துப்போட்டு பா.ஜ.க.வின் பலத்தை தற்போது 12 ஆக உயர்த்தி இருப்பதும் ரங்கசாமியை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உறவாடிக் கொண்டே பின்புலத்தில் பா.ஜ.க. மேலிடம் ஏதோ பெரிய திட்டத்துடன் காய் நகர்த்தி வருவதாகவே என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம் கருதுகிறது.
ரங்கசாமி மவுனம்
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பா.ஜ.க.விடம் மோதல் போக்கினை கடைப்பிடிக்க ரங்கசாமி விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் தி.மு.க., காங்கிரஸ் கை கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும் ரங்கசாமி அதை விரும்பவில்லை. மத்தியில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். இந்த சூழலில் மாற்று அரசியலை கையில் எடுத்தால் மத்திய அரசுடன் விரோதத்தை சம்பாதிப்பதுடன் திட்டங்கள், நிதி பெறுவதில் சிக்கலை தரும். அதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என்ற கோணத்தில் ரங்கசாமி மவுனம் சாதித்து வருவதாக அவருக்கு
நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
இந்தநிலையில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுடன் சமரசமாக செல்வதையே ரங்கசாமி விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த பதவிகளை பொறுமையாக பேசி பிரித்துக்கொள்வது என்று அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் தனது அலுவலகத்தில் ரங்கசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சுயேச்சைகள் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு பா.ஜ.க. சட்டசபையில் தனது பலத்தை உயர்த்தி மிரட்டும் தொணியில் நடந்து கொண்டாலும், நிதானத்தை கடைப்பிடிக்கவே ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை விரிவாக்கம், வாரியத் தலைவர்கள் பதவி, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க. மேலிடத்திடம் பேசி சுமுகமாக தீர்வுகாண்பதே ரங்கசாமியின் தற்போதைய திட்டம் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.
Related Tags :
Next Story