கொரோனா அச்சமின்றி சாலைகளில் நடமாடும் மக்கள்
திண்டுக்கல்லில் ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு கொரோனா அச்சமின்றி சாலைகளில் மக்கள் உலாவுகின்றனர்.
திண்டுக்கல்:
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
திண்டுக்கல்லை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு சீராக உயர்ந்து வருகிறது. இறப்பும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 140 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி, தேவையின்றி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதோடு கொரோனா தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.
ஆனால், திண்டுக்கல் நகரில் ஒருசிலர் கொரோனா பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அதிலும் சிலர் மனைவி, குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர்.
பரிசோதனைக்கு செல்வதாக...
அவ்வாறு செல்லும் போது போலீசாரிடம் சிக்கினால் மருந்து வாங்க செல்வதாக கூறி மருந்து சீட்டை காண்பிக்கின்றனர்.
அது பழைய மருந்து சீட்டாக இருந்தால் சர்க்கரை நோயாளி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருவதாக சிலர் கதை விடுகின்றனர். மனைவி, குழந்தைகளுடன் செல்வோர் குழந்தைக்கு உடல்நலம் பாதித்ததால் மருத்துவமனைக்கு செல்வதாக கூறுகின்றனர்.
இதனால் போலீசார் இரக்கப்பட்டு வேறுவழியின்றி விட்டுவிடுகின்றனர். மேலும் சிலர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, காலத்துக்கு ஏற்ற காரணத்தை கூறுகின்றனர்.
அதாவது தனியாக வாகனங்களில் செல்லும் வாலிபர்கள், கொரோனா பரிசோதனைக்கு செல்வதாக கூறி தப்பிவிடுகின்றனர்.
கடைகளில் முன்பு
இன்னும் சிலர் போலீசார் இல்லாத சாலைகளை தெரிந்து கொண்டு சர்வசாதாரணமாக சுற்றித்திரிகின்றனர். அதேபோல் ஊரடங்கால் மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் பூட்டி கிடக்கின்றன.
அந்த கடைகளின் முன்பு காலை முதல் மாலை வரை அமர்ந்து சிலர் கதை பேசி சிலாகித்து கொள்கின்றனர்.
இதுபோன்று அச்சமின்றி உலாவரும் நபர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும், அது பிறருக்கும் தொற்று ஏற்பட்டு விடும். அதன்மூலம் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.
அதை உணர்ந்து தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் தேவையின்றி சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலை மேலும் குறைக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பாாப்பாக உள்ளது.
Related Tags :
Next Story