திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 29 May 2021 6:29 AM IST (Updated: 29 May 2021 6:29 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பணிகளை சரிவர மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டித்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று திருத்தணி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தின்போது, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் நோய் தடுப்புக்கான தடுப்பூசிகள் போட தவறியது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சர் கண்டறிந்தார்.

கலெக்டருக்கு பரிந்துரை

அப்போது, அவர் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை கண்டித்தார். மேலும் தவறிழைக்கும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கொரோனா தொற்று தடுப்புக்கான முக கவசம், கிருமி ஊட்டச்சத்து மாத்திரைகள் மருந்துகள் ஆகியவை அடங்கிய பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் அரக்கோணம் எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எம்.பூபதி, மாவட்ட சப்-கலெக்டர் (பயிற்சி) செல்வி அனாமிகா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு திருத்தணி நகராட்சியில் நடந்த கொரோனா நோய்த்தொற்று தடுப்பு ஊசி போடும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அமைச்சரால் கண்டிக்கப்பட்ட அதிகாரி பணியிடமாற்றம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக முனுசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கும் பொறுப்பு செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், கலந்து கொண்ட அமைச்சர் நாசர் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சரிவர செயல்படாத அதிகாரிகளை எச்சரித்தார்.

குறிப்பாக பொதட்டூர்பேட்டை செயல் அலுவலர் முனுசாமியை அவர் கண்டித்தநிலையில், செயல் அலுவலர் உடனடியாக பொதட்டூர் பேட்டையிலிருந்து ஆரணி பேரூராட்சிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது ஆரணியில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் கலாதரன் என்பவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கும் (பொறுப்பு) செயல்அலுவலராக பணியாற்ற உள்ளார்.

Next Story