கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் தாமாக முன்வந்து போட வேண்டும்: ஊரடங்கு எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைவு


கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் தாமாக முன்வந்து போட வேண்டும்: ஊரடங்கு எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைவு
x
தினத்தந்தி 30 May 2021 6:27 AM GMT (Updated: 30 May 2021 6:27 AM GMT)

ஊரடங்கு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவள்ளூர் எம்.எல். ஏ.வி.ஜி.ராஜேந்திரன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் தடுப்பூசிபோட வரும் பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஊசி போட்ட பின் மேற்கொள்ளவேண்டிய மருந்து மாத்திரைகளின் விவரம் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை வருகின்ற 7-ந்தேதி வரை நீட்டித்து உள்ளார்.

தொற்று குறைந்தது

மேலும் இத்தொற்றினை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் துரித பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்படுகிறது

இதை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று நம்மை தாக்கினாலும் அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் உயிர் கவசமாக அமையும் என அறிவுறுத்தினார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், காஞ்சி பாடி சரவணன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், புதுமாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் குமார், மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.   

Next Story