காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை; 23 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் ஆங்காங்கே சாராய விற்பனையும் நடந்து வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தை அடுத்த சாலவாக்கம், பெருநகர், மணிமங்கலம், சோமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் சிறு காவேரிப்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 21), ஜெயபால் (23), செந்தில்குமார் (35), கோனேரிக்குப்பத்தை சேர்ந்த பத்மா (36), அஞ்சலை (40) உள்பட 23 பேரை கைது செய்தனர்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






