தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கம்


தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:37 AM IST (Updated: 2 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கம்

மதுரை
மதுரையில் இருந்து சென்னைக்கு மீண்டும் தனது பயணத்தை நேற்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தொடங்கியது. இதே போல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த மேலும் சில ரெயில்களும் பயணத்தை தொடங்கின.
ரெயில்கள் 
கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பயணிகளின் வரத்து குறைவாக இருந்து ஒரு சில ரெயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. 
இந்த நிலையில், தற்போது கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ரெயில் மற்றும் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்படவில்லை. இருப்பினும், 20 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் உள்ள ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை கோட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை தேஜஸ் சொகுசு ரெயில் ஆகியவை முக்கிய ரெயில்களாகும்.
வைகை எக்ஸ்பிரஸ்
இந்த ரெயில்கள் கடந்த மாதம் 8-ந் தேதியில் இருந்து கடந்த 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, இந்த ரெயில்கள் அனைத்தும் நேற்று முதல் வழக்கம்போல இயக்கப்பட்டன. அதன்படி, வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தனது பயணத்தை மீண்டும் ெதாடங்கியது. ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் ரெயில்வே நிர்வாகத்தால் முன்கூட்டியே செய்யப்படாததால் பயணிகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. 
வைகை எக்ஸ்பிரசை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மதுரையில் இருந்து திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.02206), மதுரை-சென்னை சென்டிரல் ஏ.சி.எக்ஸ்பிரஸ்(வ.எண்.06020), ராமேசுவரம்-திருச்சி எக்ஸ்பிரஸ் (வ.எண்.06850) ஆகிய ரெயில்களும் நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டன.
மீண்டும் இயக்கம்
மேலும், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேசுவரம்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06617), மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06868) ஆகியன இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்படவுள்ளன.
அதாவது, மதுரை கோட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில்களில் சுமார் 10 ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட சென்னை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில்களில் சில ரெயில்கள் நேற்று முதல் மீண்டும் தனது சேவையை தொடங்கியுள்ளன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story