மதுரையில் நேற்று 1,226 பேர் குணம் அடைந்தனர்


மதுரையில் நேற்று 1,226 பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:15 PM IST (Updated: 2 Jun 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,226 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். புதிதாக 572 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மதுரை,ஜூன்
மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,226 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். புதிதாக 572 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
வேகம் குறைகிறது
மதுரையில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 250 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 572 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 320 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இது வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.
1,226 பேர் குணம் அடைந்தனர்
இதுபோல், நேற்று ஒரே நாளில் 1,226 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 880 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாட்களுக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது வரை 50 ஆயிரத்து 621 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைகிறது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 504 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரம் பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.
11 பேர் பலி
இதனிடையே நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 64, 71, 76, 62, 74, 60, 70, 76 வயது முதியவர்கள், 44 வயது ஆண், 57 வயது பெண், 78 வயது மூதாட்டி ஆகியோர் ஆவர். 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 8 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மதுரை மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் நேற்று 600-க்கும் குறைவாக பாதிப்பு பதிவாகியிருப்பது மருத்துவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்து, நோய் பாதிப்பு குறைய தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story