தடுப்பூசி போட ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள்


தடுப்பூசி போட ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:03 PM IST (Updated: 2 Jun 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏராளமான மக்கள் குவிந்தனர். முன்பதிவு செய்யாத காரணத்தினால் ஏராளமானோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மதுரை, ஜூன்
மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏராளமான மக்கள் குவிந்தனர். முன்பதிவு செய்யாத காரணத்தினால் ஏராளமானோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக முக்கியமான மையங்களை தவிர்த்து, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்கு மக்கள் படையெடுத்து வந்தனர். எனவே மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் தடுப்பூசி போட முன் பதிவு செய்யும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
திரண்டனர்
இதற்கிடையே நேற்று காலை மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளி முகாமிற்கு கூட்டம், கூட்டமாக வந்தனர். இதனால் போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், முன் பதிவு செய்யாதவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு முன் பதிவு செய்த பின்னர் மீண்டும் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர். இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முதல் நாளில் 200 பேருக்கு தடுப்பூசி
இதுகுறித்து முன்பதிவு செய்யும் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஜே.கே.முத்து கூறுகையில், "சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவே முன்பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் நாளில் 200 நபர்களுக்கு எந்தவித காத்திருப்பும் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்கள் எந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பது குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கிய பின்னர் நாள் ஒன்றுக்கு 600 முதல் 800 நபர்கள் வரை முன்பதிவு செய்து, எந்தவித காத்திருப்பும் இன்றி உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்." என்றார்.
...

20 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம்

மக்களின் ஆர்வம் காரணமாக கடந்த 28-ந்தேதி மதுரையில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் விளைவாக, மதுரையில் நேற்று 2 ஆயிரத்து 58 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடம் அதிக ஆர்வம் இருந்தாலும், தட்டுப்பாடு காரணமாக அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் இருப்பதாக மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர். மதுரையில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 482 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Next Story