மின்சார என்ஜின் சோதனை ஓட்டம்
எண்ணெய் நிறுவன பாதையில் மின்சார என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
மதுரை, ஜூன்
மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் ரெயில் பாதை அருகே கூத்தியார்குண்டு ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் அருகில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகிய எண்ணை நிறுவனங்களின் சேமிப்பு டேங்கர்கள் உள்ளன. அதாவது, சென்னையில் இருந்து நிலத்தடி குழாய் மூலமாக இந்த சேமிப்பு டேங்கர்களுக்கு எரிபொருள் வந்து கொண்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் எரிபொருள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் இருந்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு 5 கி.மீ. தூர தனி ரெயில்பாதை கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இதற்கான செலவுத்தொகை ரூ.96 கோடியை எண்ணெய் நிறுவனமே ஏற்றுக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த பாதையில் சரக்கு ரெயில் மூலம் எரிபொருள் டேங்கர் எண்ணை நிறுவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக மதுரையில் இருந்து டீசல் என்ஜின் மூலம் சரக்கு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, இந்த ரெயில் பாதையில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, மின்சார என்ஜின் மூலம் அந்த பாதையில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இந்த பாதையில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் இயக்கப்படும் எனவும் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story