சரத்பவார்- தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பில் எந்த மர்மமும் இல்லை: சிவசேனா
தேசியவாத காங்கிரஸ், தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பில் எந்த மர்மமும் இல்லை என சிவசேனா கூறியுள்ளது.
சலசலப்பை ஏற்படுத்திய சந்திப்பு
மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் எதிர்க்கட்சியான பா.ஜனதா தங்கள் அரசை கவிழ்க்க ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது.இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரை, முன்னாள் முதல்-மந்திரியும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் 2 நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தேவேந்திர பட்னாவிஸ்
கூறியபோதும், இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இருப்பினும் இந்த சந்திப்பில் எந்தவித மர்மங்களும் இல்லை என ஆளும் கட்சியான சிவசேனா கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-
நாட்டுக்கான தலைவர்
சரத்பவாருக்கு எப்போதும் ஓய்வின் மீது நம்பிக்கை இல்லை. அவரது ஆதரவாளர்களும், விமர்சகர்களும் அவரை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கின்றனர்.சரத்பவார், பட்னாவிசின் சந்திப்புக்கு பின்னால் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக ஊடகங்கள் முனுமுனுக்க தொடங்கி உள்ளன. மராட்டியத்தில் ஆபரேசன் லோட்டஸ் தொடங்கி உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.இருப்பினும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியது உண்மைதான். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். சரத்பவார் மராட்டியத்திற்கு மட்டுமான தலைவர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டிற்குமான தலைவர். பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் அவரிடம் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்திரா காந்தி
ஜனநாயகத்தில் உரையாடல் என்பது மிகவும் அவசியமானது. இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைந்தார். இதைதொடர்ந்து பிரகாஷ் நாராயண் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அவரை தோற்கடித்தது. தோல்விக்கு பின்னரும் அவர் பிரகாஷ் நாராயணை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.சில தலைவர்கள் அரசியலுக்கு மேலானவர்கள், சரத்பவார் அவர்களில் ஒருவர். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவரை சந்திக்க இதுவே காரணம்.
அரசை கவிழ்ப்பது குறித்து கனவு
நெருக்கடி நிலையின்போது எதிர்க்கட்சிகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து தேவேந்திர பட்னாவிசுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். சரத்பவாரும் இதனை ஒப்புக்கொள்வார்.ஏனென்றால் மராட்டியத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பட்னாவிஸ் மகாவிகாஸ் அரசை குற்றம் சாட்டி வருகிறார்.சிறந்த எதிர்க்கட்சி தலைவர்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மராட்டியம் கொண்டுள்ளது. அவர்கள் மக்கள் பணிகளை விரைவாகச் செய்ய அரசை தூண்டினர். எதிர்க்கட்சி தலைவர் பட்னாவிஸ் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தால், அவரது அரசியல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.மராட்டிய அரசு கொரோனா தொற்றையும், புயல் பாதிப்பையும், பொருளாதார வீழ்ச்சியையும் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும்போது, பெரும்பான்மை கொண்ட அரசை கவிழ்ப்பது பற்றி கனவு காண்பது எந்த வகையில் சரியானது?
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story