மராட்டியத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 3 Jun 2021 4:34 PM IST (Updated: 3 Jun 2021 4:34 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகை வைக்கப்படும். மேலும் ஆதரவற்ற இந்த குழந்தைகளுக்கும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கும் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1,125 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு நாடெங்கும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை காவு கொடுத்து உள்ளனர்.

மத்திய அரசு உதவி
ஆதரவற்று தவிக்கும் இந்த குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு சமீபத்தில் நிதியுதவியை அறிவித்தது. அதன்படி பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ், இத்தகைய குழந்தைகளின் பெயரில் நிலைத்த வைப்பு (பிக்சட் டெபாசிட்) ஏற்படுத்தித்தரப்படும். இதன்படி அவர்கள் 18 வயதாகிறபோது ரூ.10 லட்சம் நிதி சேரும், 18 வயதிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு, உயர்படிப்பு படிக்கிறபோது 
அவர்களது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.23 வயதாகிறபோது அவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உபயோகத்துக்காக ரூ.10 லட்சம் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. பள்ளிப்படிப்புக்கான செலவை ஏற்பதாகவும், உயர் கல்விக்கு வங்கி கடன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

மராட்டியத்தில்...
இந்த நிலையில் மராட்டியத்தில் கொரோனாவால் இதுவரை 162 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 172 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்து தவிக்கின்றனர். இந்த குழந்தைகளின் துயர் துடைப்பது குறித்து நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.5 லட்சம்
கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளையும், தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளையும் பாதுகாக்க அரசு முன்வந்துள்ளது. அதன்படி தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் வங்கியில் தலா ரூ.5 லட்சம் நிலையான வைப்பு தொகை ஏற்படுத்தி தரப்படும். அவர்கள் 21 வயதை அடையும் போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து அந்த பணம் வழங்கப்படும்.மேலும் ஆதரவற்ற இந்த குழந்தைகளுக்கு மாதம் ேதாறும் பராமரிப்பு தொகையாக தலா ரூ.1,125 வழங்கப்படும். குழந்தைகளை உறவினர்கள் பாராமரிக்க முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த ெதாகை வழங்கப்படும். இது மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவியை தவிர்த்து வழங்கப்படுகிறது.

பராமரிப்பு தொகையை உயர்த்த நடவடிக்கை
மேலும் தாய் அல்லது தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம்ேதாறும் நிதியுதவியாக தலா ரூ.1,125 வழங்கப்படும். இவர்களுக்கு நிலையான வைப்பு தொகை கிடையாது. குழந்தைகள் என்பவர்கள் 18 வயது வரை கணக்கில் எடுத்து கொள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்குர் கூறுகையில், "குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Next Story