திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் தூர்வாரும் பணி


திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 4 Jun 2021 6:10 PM GMT (Updated: 4 Jun 2021 6:10 PM GMT)

திருவாரூர் ஓடம்போக்கிஆற்றில் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

திருவாரூர்:
திருவாரூர் ஓடம்போக்கிஆற்றில் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார். 
தூர்வாரும் பணிகள்
திருவாரூர் தண்டலை பகுதியில் உள்ள ஓடம்போக்கிஆறு, காணூர் பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆறு, கொட்டாரக்குடி பகுதியில் உள்ள காட்டாறு ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை  பொதுப்பணித்துறை  கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் என முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். டெல்டா மாவட்டங்களில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை குறித்த காலத்தில் தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
கூடுதல் பொக்லின் எந்திரங்கள்
இதற்காக கூடுதல் பொக்லின் எந்திரங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பணிகள் துரிதப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் டோசர் போன்ற எந்திரங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏ மற்றும் பி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 
அதனை தொடர்ந்து சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக கடைமடை வரை தண்ணீர் சென்று அடைந்திட எற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்கிறது. அங்கு அணை கட்டுவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய மாத தேவையான 2.5 டி.எம்.சி. தண்ணீரில் 1.83 டி.எம்.சி. பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 163 எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் 250 எந்திரங்கள் மூலம் தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் வருவதற்கு முன்பு அனைத்து பகுதிகளிலும்  தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் (திருவாரூர்), தமிழ்செல்வன் (தஞ்சாவூர்) காவேரி வடிநில கோட்டம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கலெக்டர் பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story