5 லட்சத்தை கடந்த கொரோனா பரிசோதனை


5 லட்சத்தை கடந்த கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 5 Jun 2021 5:02 AM IST (Updated: 5 Jun 2021 5:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

மதுரை, 
மதுரையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலை, 2-வது அலை என கொரோனா வைரசின் தாக்கம் மக்களை பெரும்பாடு படுத்தி உள்ளது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அவரிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள ஆய்வகத்திற்கு கொண்டுவந்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கென தனித்தனி பணியாளர்களும், ஆய்வக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா முதல் அலையில் நாளென்றுக்கு 6000 முதல் 8000 வரை பரிசோதனைகள் செய்து வந்த நிலையில், தற்போது நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சளி மாதிரி
அதன்படி மதுரையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள், நகர் மற்றும் புறநகர் பகுதியில் காய்ச்சல் முகாம்களில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் என நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் நபர்களிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது மதுரை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கி இருப்பதால், பரிசோதனைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
5 லட்சம் பரிசோதனை
மதுரையில் இதுவரை நோய் தொற்றால் 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் 52 ஆயிரம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். 943 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி 14 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 797 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து, 5 லட்சத்து 2 ஆயிரத்து 697 ஆக உள்ளது.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில்தான் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Next Story