கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
அரசு ஆஸ்பத்திரி
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென 1,388 படுக்கைகள் உள்ளன.
அதில் 950 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டி இருப்பதால், நோயாளிகளுக்கு எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட ஜீரோ டிலே வார்டும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
கூடுதல் படுக்கைகள்
இந்த நிலையில் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையம் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக இரவு- பகலாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஆக்சிஜன் வசதிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர்
இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, "மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரையில் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து, குணம் அடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதுதான் டாக்டர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
மதுரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும், கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் புதிதாக 250 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த சிறப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விரைவில் அந்த மையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தென்மாவட்ட மக்களுக்கு பெருமளவு உறுதுணையாக இருக்கும்" என்றார்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 446 பேர் மதுரையில் உள்ள மருத்துவ மனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story