மராட்டியத்தில் கொரோனா உயிரிழப்பு 1 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா உயிரிழப்பு 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
1 லட்சத்தை தாண்டியது
மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக மாநிலத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதாவது நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் சுமார் 3-ல் ஒருவர் மராட்டியத்தை சேர்ந்தவராக உள்ளார். இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 233 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 130 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசுக்கு 1 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது மாநில மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பாதிப்பு குறைகிறது
அதேேநரத்தில் தொற்று பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 12 ஆயிரத்து 557 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்து 31 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 55 லட்சத்து 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 389 பேர் வீடுகளிலும், 6 ஆயிரத்து 426 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 95.05 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.72 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story