மதுரையில் தடுப்பூசி கையிருப்பு இல்லை


மதுரையில் தடுப்பூசி கையிருப்பு இல்லை
x
தினத்தந்தி 8 Jun 2021 9:21 PM IST (Updated: 8 Jun 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 2-வது நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை,ஜூன்
மதுரையில் 2-வது நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடும் பணி
கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதமாக இருப்பது தடுப்பூசி தான். எனவே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மதுரையில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மையங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.
குறிப்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் மாநகராட்சி இளங்கோ பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமாக வந்தனர். தற்போது முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்கும் தடுப்பூசிகள் வழங்கப்படாததன் விளைவாக ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்த ஏராளமானோர் திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெறாத நிலையில், இன்றும் தடுப்பூசி போடப்படாது என்று கூறப்படுகிறது.
கையிருப்பு இல்லை
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மதுரையில் கடந்த சில தினங்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதனை போக்கும் வகையில் அரசிடமிருந்து தடுப்பூசிகள் அதிக அளவில் கேட்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு வரை தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவில்லை. இன்றும் இரவில்தான் தடுப்பூசிகள் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நேற்று ஏற்கனவே கையிருப்பில் இருந்த 265 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. என்றார்.

Next Story