திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: வருவாய்த்துறை சார்பில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: வருவாய்த்துறை சார்பில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 10 Jun 2021 1:29 AM GMT (Updated: 10 Jun 2021 1:29 AM GMT)

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர், வருவாய்த்துறையில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவள்ளூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளுரில் உள்ள மாவட்ட அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக‌ 80 படுக்கைகளை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக 80 படுக்கைகளை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை சார்பில் 19 நபர்களுக்கு கருணை அடிப்படையில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆவடி, ஆகிய வட்டங்களில் இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் மற்றும் மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கொரோனா குறைகிறது

அப்போது அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் திருவள்ளுர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்ட முன்னேற்பாடு பணிகள் காரணமாக திருவள்ளுர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதிகபட்சமாக ஒரு நாளில் 2 ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று இருந்த நிலையில், தற்போது 400 நபர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. நோய்த்தொற்று சதவீதம் 23 என்ற நிலையில் இருந்து தற்போது 6 சதவீதம் என்ற நிலையில் குறைந்து வருகிறது.

திருவள்ளுர்‌ மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கென்று 1,254 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 714 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதில் 412 படுக்கைகள் காலியாக உள்ளது.

படுக்கை வசதிகள்

கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்படும் படுக்கை வசதிகள் கூடுதலாக்க திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் 60 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதலாக 272 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த முழு ஊரடங்கு கால கட்டத்தில் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனாமிகா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கொத்தியம்பாக்கம் தேசிங்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி, தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story