நிலச்சரிவு, சுவர்கள் இடிந்தன தானே, பால்கரில் கனமழை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


நிலச்சரிவு, சுவர்கள் இடிந்தன தானே, பால்கரில் கனமழை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jun 2021 11:45 AM IST (Updated: 10 Jun 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டத்தில் நேற்று கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது. மழை தொடர வாய்ப்பு இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

தானே, 

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே நேற்று தானே, பால்கர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக கல்யாண், டோம்பிவிலி, அம்பர்நாத், பத்லாப்பூர் மற்றும் பிவண்டி நகரங்களில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.

மும்ராவில் உள்ள பன்வெல்- கல்வா சாலை மற்றும் மும்ரா பைபாஸ் சாலையில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுபோல சாவர்க்கர் நகர் மற்றும் மனோரமா நகரில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் சுற்று சுவர் மழைக்கு தாக்குபிடிக்காமல் திடீரென இடிந்து விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக அந்த சுற்றுசுவர் அருகே யாரும் இல்லாதால் காயம் அடையாமல் தப்பினர். ஆனால் வாகனங்கள் சேதம் அடைந்தன.

மழையின்போது மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு இந்த தகவல்களை தெரிவித்து உள்ளது.

இதேபோல பால்கர் மாவட்டத்தை பொருத்தவரை மிரா பயந்தர் மற்றும் வசாய் விரார் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் இந்த மாவட்டத்தில் மழை தொடர்பான பெரிய விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை.

வரும் நாட்களில் தானே, பால்கரில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story