திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்


திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Jun 2021 4:46 PM IST (Updated: 13 Jun 2021 4:46 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அப்போது டோக்கன் வழங்கப்பட்ட 200 பேருக்கு மட்டும் போடப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே அச்சம் நிலவியது. ஆனால் தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

ஏமாற்றத்துடன் சென்றனர்

இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என நகராட்சி ஆணையர் செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் ஆகியோர் அறிவித்தனர். தகவல் அறிந்ததும் காலையிலேயே பள்ளி முன்பு 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் டோக்கன் வழங்கப்பட்ட 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தடுப்பூசி வந்தவுடன் செலுத்த நடவடிக்கை

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கவுரி கூறுகையில், தற்போது வந்த தடுப்பூசியை நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு பிரித்து அனுப்பி விட்டோம். இதனால் தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே மீண்டும் தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

வடுவூர்

இதேபோல் வடுவூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Next Story