திருவாரூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


திருவாரூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 Jun 2021 3:47 PM IST (Updated: 14 Jun 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டசபை தொகுதியில் கொரோனா தொற்றை தடுத்திடும் வகையில் மன்னார்குடி டி.ஆர். பி.ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின்படி நேற்று 7 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமங்கலம், கூப்பாச்சிக்கோட்டை, மகாதேவப்பட்டினம் உள்ளிட்ட 7 கிராம மையங்களில் நடந்த முகாம்களில் மக்கள் வெகு நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

முகாம்கள் அமைத்து...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தலையாமங்கலம்

மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார். முகாமில் தலையாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 300 பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். இதில் தலையாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ஏட்டு தவச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் 18 வயதுக்கு மேல் 44 வயதிற்கு உட்பட்டவர்கள் 208 பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 144 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். முகாமை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் பார்வையிட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவகி ஆவணி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வீரா பாஸ்கரன், தென்பரை ரோட்டரி சமுதாய குழுமத்தின் நிறுவன தலைவர் சுப்பிரமணியன், தலைவர் மணிவண்ணன், செயலாளர் பாஸ்கர், உறுப்பினர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பரப்பனாமேடு, ஒளிமதி, அனுமந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் 149 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி தலைமையில் டாக்டர்கள் விஜய், திருவொளி மற்றும் கிராமசுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 100 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 முகாம்களிலும் குறைந்த அளவே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்ததால் சுகாதாரத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

குடவாசல்

குடவாசல் ஒன்றியம் திருப்பாம்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜோதிராமன் தொடங்கி வைத்தார். திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கலைவாணி தலைமையில் செவிலியர்கள் மற்றும் குழுவினர் 10 பேர் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டனர். இதேபோல் சற்குணேஸ்வரபுரம், பருத்தியூர் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அரசு டாக்டர் அழகானந்தம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் அய்யா கணபதி முருகையன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஜாம்புவானோடை, செங்காங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கிராம கமிட்டியை சேர்ந்த ராம்மோகன், பழனிவேல் ராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகானந்தம், ஊராட்சி செயலாளர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story