காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் பதவியேற்பு


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் பதவியேற்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 5:36 AM GMT (Updated: 17 Jun 2021 5:36 AM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர்.

பதவியேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பதவி வகித்த மகேஸ்வரி ரவிகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம். ஆர்த்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நேற்று தனது அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகதை பூர்வீகமாக கொண்டவர். பல் மருத்துவம் படித்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர். புதிய கலெக்டராக பதவியேற்று கொண்டபின் 4 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்:-
மாநில அளவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக முழுமையான கவனம் செலுத்தப்படும். இது ஒரு சவாலாக இருக்கிறது.

தடுப்பூசிதான் சிறந்த ஆயுதம்
கொரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி தான் ஒரு சிறந்த ஆயுதம். எனவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை என்னிடம் நேரில் சொல்லலாம். நான் 
எந்நேரமும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறேன். அதிகாரிகளும் மக்களும் இணைந்து வளர்ச்சி பணிகளை அதிகமாக செய்து காஞ்சீபுரம் மாவட்டத்தை ஒரு சிறந்த மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதியதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட கலெக்டரை, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராணி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி ஆகியோர் வரவேற்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.பின்னர் காஞ்சீபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவல் துறை குடும்பத்தினருக்கு, இலவச கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் முன்னிலையில், சமுதாயக்கூட வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிமேகலை, சண்முகம் மற்றும் போலீஸ் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆன நிலையில் மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் லூயிஸ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் சென்னை தலைமை செயலகத்துக்கு மாற்றப்பட்டு புதிய கலெக்டராக ராகுல்நாத் நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தின் 2-வது கலெக்டராக ராகுல்நாத் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் ஏற்கனவே கலெக்டராக பதவி வகித்து வந்த் ஜான் லூயிஸ் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ் மற்றும் பல்வேறு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story