குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை


குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2021 4:08 AM GMT (Updated: 18 Jun 2021 4:08 AM GMT)

மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது. பின்னர் முடிவுற்ற மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டார்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கோயம்பேடு வணிக வளாகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனக் காடுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து ஆலந்தூர் மண்டலம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நந்தம்பாக்கம் கால்வாயை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் குறித்த களஆய்வுக்கு பிறகு நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காமல் ஒப்பந்தப்பணிகளில் தொய்வு ஏற்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கு உட்பட்ட கொசஸ்தலை வடிநிலப்பகுதிகளின் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காமல் ஒப்பந்தப்பணிகளில் தொய்வு ஏற்படுத்திய 23 ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்கான தாமதம் குறித்து காரணம் கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

Next Story