நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்


நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Jun 2021 1:01 AM IST (Updated: 20 Jun 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.

மதுரை,

கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.

 நகை மோசடி

மதுரை மேலவெளிவீதி பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 53), நகை வியாபாரி. இவரிடம் வாடிப்பட்டியை சேர்ந்த மெய்யப்பன் என்பவர் அங்குள்ள முருகன் கோவிலில் திருப்பணி வேலை நடைபெறுகிறது. எனவே கோவிலுக்கு ஒரு பவுன் எடையுள்ள 5 தங்க காசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நம்பி அழகப்பன் வாடிப்பட்டிக்கு நகையை எடுத்து கொண்டு புறப்பட்டு கொண்டிருந்தார்.
 அப்போது மெய்யப்பன் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு மேலவெளிவீதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தனது கணக்குபிள்ளை கருப்பையா இருக்கிறார்.
அவரிடம் நகையை கொடுத்து விட்டு, வாடிபட்டிக்கு வந்து தன்னிடம் பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். அதை நம்பிய அழகப்பன் 5 பவுன் நகையை அவரிடம் கொடுத்து விட்டு வாடிப்பட்டிக்கு சென்றார். அங்கு மெய்யப்பனை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் அணைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் தன்னிடம் பணம் தருவதாக ஏமாற்றி அவர்கள் நகையை மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தானப்பமுதலி தெரு சந்திப்பில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அருணாச்சலம் (65), வரதராஜன் (70) என்பதும். அவர்களுக்கு இந்த நகை மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அருணாசலம் மெய்யப்பனாகவும், வரதராஜன் கருப்ைபய்யாவாகவும் நகை வியாபாரியிடம் நடித்தது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் மூலமாக இந்த மோசடி ஆசாமிகளை போலீசார் பிடித்தனர்.பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த  5 பவுன் தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.

கமிஷனர் பாராட்டு

 இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமாணிக்கம், கணேசன், மரியசெல்வம் ஆகியோரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
----

Next Story