சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி: வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சாலை மறியல்


சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி: வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2021 5:57 AM IST (Updated: 22 Jun 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலியானார். அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பலியானவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் மஸ்தான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர், கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக அதே தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பாழடைந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து தீனதயாளன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, சென்னை அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிரிழந்தார்

அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, ஒரு மாதம் கழித்து திரும்பி வருமாறு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தீனதயாளனின் மனைவி செல்வி, ராயபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், தன் கணவர் மீது சுவர் இடிந்து விழுந்த பாழடைந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி இருந்தார்.

இந்த நிலையில் முதுகுத்தண்டு முறிந்து, கால் உடைந்த நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த தீனதயாளன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்து போன தீனதயாளன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்ககோரியும் ராயபுரம் சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த ராயபுரம் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story