பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 400 கனஅடியாக சென்றடைகிறது


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 400 கனஅடியாக சென்றடைகிறது
x
தினத்தந்தி 22 Jun 2021 1:07 AM GMT (Updated: 22 Jun 2021 1:07 AM GMT)

பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 400 கனஅடி வீதம் வந்து சேருகிறது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி 2-வது தவணையாக திறந்து விடப்பட வேண்டிய நீர் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப முன்னதாகவே கடந்த 14-ந்தேதி திறந்துவிடப்பட்டு தண்ணீர் 16-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது. அன்றைய தினமே பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

முதலில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

400 கனஅடி

நேற்று காலை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 470 கனஅடி வீதம், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 19.60 அடியாக பதிவாகியது. 217 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 41 கன அடி நீரும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீரும் திறக்கப்படுகிறது.

Next Story