திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த தச்சூர் கிராமத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில் ஏகமனதாக நிறைவேற்றிய 7 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் வாசித்தார்.
அதில் சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துவிட்டு அ.தி.மு.க. மக்களின் செல்வாக்கு பெற்றிருப்பதை கண்டதும் அ.தி.மு.க.வை அபகரிக்க சதி செய்து ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி வரும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தல், சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவிக்க நினைப்போரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் கொரோனா பெருந்தொற்று அதிக அளவில் பரவும் விதமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த மக்கள் விரோத தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின்போது இறப்பு விகிதம் குறைவாக இருந்திட செய்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story