மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட என்ஜினீயர் திடீர் சாவு

மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட என்ஜினீயர் திடீரென இறந்தார். இதுகுறித்து மருத்துவ துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை புதுவிளாங்குடி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவக்குமார். இவருடைய மகன் ஆன்ட்ரூ சைமன்(வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் இங்கிலாந்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்கிருந்து பெங்களூரு வழியாக மதுரை வந்தார்.
வரும் வழியில், பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் பாதிப்பு இல்லை என தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மதுரை வந்த ஆன்ட்ரூ சைமன், புதுவிளாங்குடி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியபடி வேலை செய்து வந்தார். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து அவர் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சமயநல்லூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் மனைவியுடன் சென்று ஆன்ட்ரூ சைமன் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார். அதன்பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
நேற்று காலை ஆன்ட்ரூ சைமனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, ஆன்ட்ரூ சைமனின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கூடல்புதூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆன்ட்ரூ சைமன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், ஆன்ட்ரூ சைமனுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் காத்திருப்பு அறையில் இருந்தபோது எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை. இருந்தாலும் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பின்னரே அவர் இறப்புக்கான காரணம் தெரியவரும், என்றார்.
Related Tags :
Next Story






