ஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வாய்ப்பு


ஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 5 July 2021 4:13 AM GMT (Updated: 5 July 2021 4:13 AM GMT)

ஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு நடப்பாண்டு 5 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வழங்க வாய்ப்பு இருப்பதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநில அரசு, சென்னை மாநகர பகுதியின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் கிருஷ்ணா நீரை திறந்துவிட்டது. அந்த நீர் கடந்த 17-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

அப்போது விநாடிக்கு 105 கன அடியாக இருந்த நீர் வரத்து, படிப்படியாக உயர்ந்து தற்போது 500 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 22 அடி தண்ணீர் உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

போதுமான நீர் இருப்பு

ஆந்திர மாநிலத்தில் தற்போது பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணையில் 40.870 டி.எம்.சி.யும், சோமசீலா அணையில் 44.890 டி.எம்.சி., கண்டலேறு அணையில் 39.070 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இருப்பதால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை முதல் தவணையில் 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 2-வது தவணையில் 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. நீர் வழங்க இரு மாநில அரசுகள் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

5 டி.எம்.சி. வழங்க வாய்ப்பு

கடந்த ஆண்டு ஆந்திர மாநில அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்ததாலும், போதிய பருவ மழை பெய்ததாலும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை வழங்க வேண்டிய 8 டி.எம்.சி. நீர் முழுமையாக வழங்கப்பட்டது.

அதேபோல் நடப்பாண்டிலும் ஆந்திர மாநிலத்தில் பருவ மழை நன்றாக இருப்பதுடன், அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளதால் தண்ணீரை முழுமையாக வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இருந்தாலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 5 டி.எம்.சி.க்கு மேல் கண்டிப்பாக தண்ணீர் வழங்க வாய்ப்பு உள்ளது.

ஏரிகளின் நீர் மட்டம்

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை என 5 ஏரிகளிலும் சேர்த்து 6 ஆயிரத்து 738 மில்லியன் கன அடி (6.7 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

இதில் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 179 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 10, புழலில் இருந்து 155, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து 5, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 156 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

பூண்டிக்கு 525 கன அடியும், புழல் 155, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

கூடுதல் குடிநீர் வினியோகம்

சென்னை மாநகருக்கு தற்போது 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் குடிநீருக்காக பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்பதற்காக வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசிடம் ஆலோசனையும், அனுமதியும் கோரப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வர உள்ளது.

சென்னை மாநகரப்பகுதி, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூண்டி ஏரிக்கு இன்ப சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஏரிகளின் அழகை பார்த்து ரசித்ததுடன், நீர் மட்டம் உயர்வு மற்றும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீரை பார்வையிட்டனர். கால்வாயில் மீன் பிடித்தும் மகிழ்ந்தனர்.

Next Story